அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Monday, 30 July 2012

சுதந்திர விழாவில் சாதனைச் சிறுவன்

சு.மகிழன் பரிதி

திருப்பூர் நகர மண்டபத்தில் ஆக. 15 அன்று நிகழ உள்ள சுதந்திர தினத் திருவிழாவில் காலை 11.00 மணி முதல் 11.30 மணிவரை, 'வளரும் சிகரம்' செல்வன் சு.மகிழன் பரிதி குழுவினரின் தேசபக்திப்பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மூன்று வயது முதல் மேடைகளில் பாடிவரும் ஞானக் குழந்தையான மகிழன் பரிதியின் பெற்றோரும் இசை ஆர்வலர்கள்.  இவரது தந்தை சுபாஷ் திருப்பூர் கல்வி அறக்கட்டளை பள்ளியின் நிர்வாக இயக்குனர்; தாய் சுப்புலட்சுமி ஸ்வரவாணி கலாலயா இசைப்பள்ளியின் நிர்வாகி. தற்போது ஊத்துக்குளியில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் மூன்றாவது பயிலும் மகிழன் பரிதி, தனது குழுவினருடன் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

'வளரும் சிகரம்', 'சாதனைச் சிறுவன்', 'அகஸ்தியர் விருது' ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள மகிழன் பரிதி (8)  திருப்பூர் நகரைச் சேர்ந்தவர் என்பது நமக்குப் பெருமை. இதுவரை 70 மேடை நிகழ்சிகளில் பாடியுள்ள பரிதி, மூவர் தேவாரம், திருப்புகழ் பாடல்களை குறுந்தகடுகளுக்காக (CD) பாடி இருக்கிறார்.

இவரது இணையதளம்: மகிழன் பரிதி டாட் காம்

.

No comments:

Post a Comment