அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Sunday 19 August 2012

நமது விழா குறித்து தினமணியில் வெளியான செய்தி- 3


கலாசாரம் சார்ந்த பொருளாதாரத்தால் 
இந்தியா முன்னேறி வருகிறது
பேராசிரியர் ப.கனகசபாபதி

திருப்பூர், ஆக. 15: கலாசாரம் சார்ந்த பொருளாதார முறையை கடைப்பிடித்து வருவதால் நம்நாடு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது என்று கோவை தமிழ்நாடு நகரியல் கல்வி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ப.கனகசபாபதி தெரிவித்தார்.

திருப்பூரில் சுதந்திர தின திருவிழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் புதன்கிழமை அவர் பேசியது:

பொருளாதாரம் என்பது தனி மனிதருக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் அடிப்படையாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா உலகப் பொருளாதரத்தில் 3ல் ஒரு பங்கு என்ற பங்களிப்பு கொடுத்தது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நமது பொருளாதாரம் அழிக்கப்பட்டது. தொழில்துறை நசுக்கப்பட்டது. நமது கல்வி முறைய அழித்தனர். சுதந்திரத்திற்குப் பின், பல தடைகளையும் கடந்து பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் ரஷ்யா சார்ந்தும், அதன் பின் அமெரிக்கா சார்ந்தும் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும், இந்திய மக்கள் பாரம்பரிய கலாசார முறையில் தங்கள் பொருளாதார முறையை கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமாக செலவு செய்யாமல் சேமிக்கும் பழக்கம் இருப்பது தான் நமது நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

தொழில் மூலதனத்துக்கு உறவினர், நண்பர்கள் பணம் கொடுத்து உதவுவது போன்ற உறவு சார்ந்த முறை நம்மிடம் வலுவாக உள்ளது. வெளிநாடுகளில் குடும்ப அமைப்பு, சேமிப்புப் பழக்கம் என்பது நம் நாட்டினர் அளவுக்கு இல்லை.

அடுத்ததாக சமூக மூலதனம் முக்கியமானது. தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வட மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் திருப்பூர் பனியன் தொழில் அனைவரையும் வரவேற்று ஏற்றுக் கொள்கிறது. இத்தகைய சமூக மூலதனம் தொழில் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

திருப்பூர், சூரத் போன்று நாடு முழுவதும் 2 ஆயிரம் தொழில் மையங்கள் உள்ளன. கல்வியறிவு அற்றவர்களும் இத்தகைய தொழில் மையங்களை நடத்துகின்றனர். சாதாரண மக்களால் நடத்தப்பபடும் தொழில் நிறுவனங்கள் மூலமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது நம்மைச் சார்ந்து இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.
 உழைக்கும் தன்மை, சேமிக்கும் தன்மை, இறையுணர்வுடன் கூடிய பொருளாதார அணுகுமுறை ஆகியவற்றை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையான நமது கலாசாரத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.


நன்றி: தினமணி செய்தி (16.08.2012)
.

No comments:

Post a Comment