அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Sunday 19 August 2012

நமது விழா குறித்து தினமணியில் வெளியான செய்தி- 2பனியன் தொழிலில் உள்முகக் 
கோளாறுகளை சரி செய்ய வேண்டும்
நிப்ட்- டீ கல்லூரித் தலைவர்
ராஜாசண்முகம்


திருப்பூர், ஆக. 15: திருப்பூர் பனியன் தொழிலில் இருக்கும் உள்முகமான கோளாறுகளைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று நிப்ட்- டீ கல்லூரித் தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார்.

திருப்பூரில் 50க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில், சுதந்திர தினவிழா ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் டவுன்ஹாலில் சுதந்திர தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தியாகி ஜி.முத்துசாமி தேசியக் கொடியேற்றி வைத்தார்.

இதற்கு திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே.பி.கோவிந்தசாமி தலைமை வகித்தார். டி.கே.டி. கல்வி நிறுவன உரிமையாளர் டி.லிங்க்ஸ் சவுகத்அலி, காந்திய மக்கள் இயக்க மாவட்டச் செயலர் ஏ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

இதையொட்டி, 'தொழிலும் பொருளாதாரமும்' என்ற கருத்தரங்கில் நிப்ட்-டீ கல்லூரித் தலைவர் ராஜா சண்முகம் பேசியது:

திருப்பூர் பனியன் தொழில் இடர்பாடுகளுடன் நடந்து கொண்டிருக்கிறது. மின்தடை உள்பட பல்வேறு வகையான பிரச்னைகள் உருவாகியுள்ளன. அவற்றுக்குள் இருந்து கொண்டு தொழிலை நடத்த வேண்டிய நிலை உள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு வரை நாடுகளுக்கு இடையில் கோட்டா முறை கடைபிடிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு முதல் கோட்டா முறை நீக்கப்பட்டதால் உலகமே ஒரே சந்தையாக உருமாறிக் கொண்டு வருகிறது.

தயாரிக்கப்படும் பொருளின் தரம், பணத்துக்கேற்ற மதிப்பு ஆகியவை உலகச் சந்தையில் முக்கியமாகக் கருதப்படுகிறது. இவற்றை வைத்து பொருள்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

திருப்பூர் தொழில் நிறுவனங்கள் 2004ம் ஆண்டு வரை கோட்டா முறையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்து கொண்டிருந்தன. உலகமயமாதல் காரணமாக எந்தவொரு நாட்டிலும் எந்தப் பொருள்களையும் எந்த நாடும் வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டபின் போட்டி என்பது மிகக் கடுமையானதாக மாறியிருக்கிறது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

திருப்பூர் பனியன் தொழிலில் வெளிமுகமான காரணங்களை விட, உள்முகமான கோளாறுகளைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். பாத்திரத்தில் ஏற்பட்ட ஓட்டையை சரி செய்யாமல், காவிரித் தண்ணீரை ஊற்றினாலும், கங்கை நீரை ஊற்றினாலும் பயன் இல்லை. அணுகுமுறையில் மாற்றங்களைக் கொண்டு வந்து, தொழிலுக்கும் நமக்கும் இடைவெளி விடாமல் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதுதான் தொழிலுக்கு உரமாக அமையும்.

உலகச் சந்தை எதை எதிர்பார்க்கிறதோ அதை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தயாரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. தனிப்பட்ட வடிமைப்புகளை உருவாக்கி ஆடைகள் தயாரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

திருப்பூரில் உள்ள நிப்ட்- டீ கல்லூரியை பனியன் தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக உருவாக்க வேண்டும். இதற்கான கடமை அனைவருக்கும் உள்ளது. அதன் மூலமாக பனியன் தொழிலை பாதுகாப்பாகவும், வளர்ச்சியை நோக்கியும் கொண்டு செல்ல முடியும் என்றார்.

நன்றி: தினமணி செய்தி (16.08.2012)

.

No comments:

Post a Comment